மத்திய அரசு பஞ்சாப்பை அவமதிக்க முயற்சிக்கிறது - முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு !
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறி ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இலையில் நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களை ஏற்றி வந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரை இறங்கியது. இதையடுத்து அங்கிருந்து இந்தியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 119 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துகிறது. 119 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் இன்று இரவு பஞ்சாப் மாநிலத்திற்கு வர உள்ளது.
இந்த நிலையில், விமானத்தை தரையிறக்க அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"முதல் விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. இப்போது, இரண்டாவது விமானம் இன்று தரையிறங்கும். விமானத்தை தரையிறக்க அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் மோடியும்- டிரம்பும் சந்தித்த நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் நம் மக்களைக் கட்டிப்போட்டிருக்க வேண்டும். டிரம்ப் கொடுத்த பரிசு இதுதானா?
லாகூர் அமிர்தசரஸிலிருந்து வெறும் 40 கி.மீ தொலைவில் உள்ளது. எதிரி நாடான பாகிஸ்தான், அமிர்தசரஸ் அருகில் உள்ளது என்று தெரிந்தும், இந்த விமானங்களை இங்கே தரையிறக்க மத்திய அரசு ஏன் தேர்வு செய்தது? இது என்ன வகையான வெளியுறவுக் கொள்கை? விமானங்களை தேசிய தலைநகரில் தரையிறக்க வேண்டும் அங்கிருந்து நம் மக்களை அழைத்து வருவோம்.
பஞ்சாபியர்கள் மட்டுமே சட்டவிரோத குடியேறிகள் என்று சித்தரிக்க வேண்டுமென்றே அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பாஜக எப்போதும் பஞ்சாபை அவதூறு செய்ய சதி செய்கிறது. அமிர்தசரஸில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்க அவர்கள் அனுமதிப்பதில்லை, அது அதற்கு ஏற்றதல்ல என்று கூறி, இப்போது அமெரிக்காவிலிருந்து விமானங்கள் ஏன் வருகின்றன?
விமானத்தை டெல்லி அல்லது அகமதாபாத்தில் தரையிறக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, டெல்லி சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானத்தை டெல்லியில் தரையிறக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.