“சர்க்கரை, எத்தனால் விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!” - அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்!
சர்க்கரை மற்றும் எத்தனால் இரண்டிற்கும் உள்நாட்டு விலையை உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்திய சர்க்கரை மற்றும் உயிர் ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024-25 பருவத்திற்கான எத்தனால் விலையையும், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையையும் அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. பிப்ரவரி 2019 முதல் சர்க்கரையின் தற்போதைய குறைந்தபட்ச விற்பனை விலை கிலோவுக்கு ரூ.31 ஆக உள்ளது.
பெட்ரோலிய அமைச்சகம் எத்தனால் விலை உயர்வை மதிப்பாய்வு செய்து வருகிறது. 2022-23-ல் நிர்ணயிக்கப்பட்ட எத்தனால் விலை தற்போது வரை மாறாமல் உள்ளது. கரும்புச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் விலை லிட்டருக்கு ரூ.65.61 ஆகவும், பி-ஹெவி மற்றும் சி-ஹெவி மொலாசஸ் எத்தனால் முறையே ரூ.60.73 மற்றும் ரூ.56.28 ஆகவும் உள்ளது. 2022-23 சீசனில் சர்க்கரை ஏற்றுமதி 6.4 மில்லியன் டன்னாக இருந்தது. 2021-22 ஆம் ஆண்டில், சர்க்கரை ஏற்றுமதி 11 மில்லியன் டன்களை எட்டியது. இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது.
பருவமழையால் 2024-25 சீசனில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) சர்க்கரை உற்பத்தி நன்றாக இருக்கிறது” என தெரிவித்தார்.