“மத்திய அரசு பணிந்துள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில், இத்திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் வந்தால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த நிலையில், அரிட்டாப்பட்டி பல்லியிர் பாதுகாப்பு மண்டல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பையடுத்து அரிட்டாபட்டி கிராம மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, மதிமுக நிறுவனர் வைகோ, சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ததை வரவேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களின் உணர்வுக்கும் மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“ நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுக-வும் துணைபோகக் கூடாது”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.