வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசத்துக்கு 64,000 டன் வெங்காயத்தை தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் 31-ம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் கையிருப்பு போதுமான அளவில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விலை சரிவை தடுக்கும் நோக்கில் நட்பு நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசத்துக்கு 64,000 டன் வெங்காயத்தை தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"வங்கதேசத்துக்கு 50,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யவும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த ஏற்றுமதிகள் அனைத்தும் என்சிஇஎல் மூலம் செய்யப்பட வேண்டும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.