Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மீனவர் பிரச்னைக்கு மத்திய,மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

03:25 PM Aug 24, 2024 IST | Web Editor
Advertisement

“இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

Advertisement

வங்கக்கடலில் மீன்பிடித்த 11 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாமகத் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

“நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்திலிருந்து, வங்க கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யும், சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மீனவர்கள் மீது ஒருபுறம் கைது, இன்னொரு புறம் கடற்கொள்ளையர்களை ஏவித் தாக்குதல் என இரு முனைத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களில் தமிழ்நாடு மீனவர்கள் மீது மூன்று முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இப்போது தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல மாறாக ஒட்டுமொத்த இந்தியாவின் இறையாண்மை மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகத் தான் பார்க்க வேண்டும்.

கடந்த இரு மாதங்களில் மட்டும் தமிழ்நாடு மீனவர்கள் 120 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 52 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 68 பேரும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமின்றி, இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு 6 மாதம் சிறை, மூன்றாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு சிறை என தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த போது உதவியது இந்தியா தான். ஆனால், அந்த நன்றி கூட இல்லாமல் மீனவர்களை கைது செய்வதன் மூலம் இந்தியாவை இலங்கை சீண்டிக் கொண்டிருக்கிறது. இதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா சரியான பாடம் புகட்ட வேண்டும். இன்னொருபுறம், இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Anbumani RamadossCentral GovtFishermenfishersPMKsrilankan navyTN Govt
Advertisement
Next Article