விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு!
விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கியது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, திருப்பூர், ஈரோடில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என சமீபத்தில் புகார் எழுந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும் சிறிது நிமிடங்களில் அது சரிசெய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் யூபிஎஸ் பழுதால் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழந்தன. விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு காலை 9.28 மணி முதல் 9.58 மணி வரை சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன. மின்பழுது காரணமாக கேமராக்கள் நின்றதாகவும், அடுத்த 30 நிமிடங்களில் கேமராக்கள் சரிசெய்யபட்டு மீண்டும் செயல்பட துவங்கியதாகவும் மாவட்ட தேர்தல் ஆணையர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.