’ஜெய்பீம்’ பாணியில் குறவர் இன மக்கள் மீது சாதிய அடக்குமுறை...
மின் கம்பம் இருந்தும் மின் விளக்கு இல்லை, குடிநீருக்காக பொது குழாய் இருந்தும் அதில் தண்ணீர் பிடிக்க அனுமதி இல்லை இதுபோன்ற பல்வேறு வகையான அடக்குமுறையை மாற்று இனத்தவர் தங்கள் மீது செய்தவதாக கண்ணீருடன் குறவர் இன மக்கள் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே லட்சுமி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ் பகுதியில் வீடுகள் இன்றி நாடோடி மக்களாக வாழ்ந்து வந்தவர்கள் குறவர் சமூக மக்கள். வீடுகள் கூட்ட பயன் படும் விளக்குமாறு செய்வது, வீடுகளில் பயன்படுத்தும்
எரிவாயு அடுப்புகளை சரி செய்வது என கிடைக்கும் தொழிலை செய்து தங்களது
வாழ்க்கையை நடத்தி வந்த குறவர் சமூக மக்களுக்கு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு
பின்பு சித்தோடு அருகே உள்ள கன்னிமார் காடு பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின்
சார்பில் 25க்கும் மேற்பட்டோருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த இடத்தில் குறவர் சமூக மக்கள் ஓலை குடிசைகள் மற்றும் சிமெண்ட் சீட் மேற்கூரைகளை அமைத்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் குறவர் இன மக்களை பொது தடத்தில் நடக்க கூடாது என்றும் பொது குழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது எனவும் சாதிய தீண்டாமையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதி மக்கள் வாழும் பகுதிக்கு
எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தராமல், வரும் உதவிகளையும் தடுத்து உள்ளனர்.
நகர பகுதியாக இருந்தும் மலை கிராமங்களுக்கு செல்ல சாலை இல்லை, மின் கம்பம் இருந்தும் மின் விளக்கு இல்லை, பட்டா இருந்தும் வீடுகள் கட்ட போதுமான அரசு உதவிகள் இல்லை, சாக்கடை வசதி இருந்தும் அதனை முறையாக பராமரிப்பு செய்வது இல்லை, குடிநீருக்காக பொது குழாய் இருந்தும் அதில் தண்ணீர் பிடிக்க அனுமதிப்பது இல்லை. குறவர் சமூக மக்களின் மீது காவல்துறையினர் மூலமாக பொய் வழக்குகள் போடப்பட்டு செய்யாத குற்றங்களுக்காக காவல்துறையினர் அடித்து துன்புறுத்தி வருவதாகவும்,
இது போன்ற பல்வேறு வகையான சாதிய பாகுபாட்டுடன் குறவர் சமூக மக்கள் மீது
பல்வேறு வகையான அடக்குமுறையை மாற்று சமூக மக்கள் செய்து வருவதாகவும்,
வேதனையுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறவர் சமூக மக்கள் கண்ணீருடன் புகார் அளித்தனர்.
தாங்களும் மாற்று சமூகத்தினர் போல வாழ அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.