INDIA கூட்டணி பெயர் மீதான வழக்கு - எதிர்க்கட்சிகள் பதிலளிக்க இறுதி வாய்ப்பு அளித்த டெல்லி உயர்நீதிமன்றம்!
INDIA என்னும் பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இறுதி கெடு வழங்கியுள்ளது.
காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கு எதிராக கிரிஷ் பரத்வாஜ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்தியா என்னும் நமது நாட்டின் பெயரை எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக வைத்திருப்பதாகவும், இது வாக்காளர்களிடம் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதால் இந்தியா என்னும் பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு மீது ஏற்கனவே பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மீது இன்னும் பதில் அளிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. ஆகையால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மனுதாரரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு வாரத்தில் எதிர்க்கட்சிகள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இறுதி விசாரணைக்காக ஏப்ரல் பத்தாம் தேதி வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும் எனவும் கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.