பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் தீர்ப்பு!
மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், 2 லட்சத்து 50 ரூபாய் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியலாளர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இறுதியாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்து சிபிசிஐடி போலீஸார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பான அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 26-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது. ஆனால் முருகன் மற்றும் கருப்பசாமி மட்டுமே ஆஜரான நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் தீர்ப்பை இன்றே அறிவிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்ட நிலையில், 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும், மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி பகவதியம்மாள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.