அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்த விவகாரம்! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
முடித்து வைக்கப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வைத்த வாதங்களாவது:
இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி அனுமதியை பெறும் முன்பே தனி நீதிபதி தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளார். தலைமை நீதிபதி கடிதத்தை பார்க்கும் வரை ஏன் தனி நீதிபதியால் காத்திருக்க முடியவில்லை? தாமாக முன்வந்து வழக்கினை விசாரிப்பதற்கு என்று ஒரு முறை உள்ளது அதனை தனி நீதிபதி பின்பற்றவில்லை. ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கும் குறிப்பிட்ட வகை வழக்குகளை ஒதுக்கும் பொறுப்பு தலைமை நீதிபதிக்கு தான் இருக்கிறது. அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை என்றால் குறிப்பிட்ட நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவுகளும் செல்ல தக்கவையாக இருக்காது என்ற விதிமுறைகள் இருக்கிறது. இவ்வாறு மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தனி நீதிபதி
எம்.பி , எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் ரோஸ்டர் நீதிபதியாக தானே இருக்கிறார், அப்படி இருக்கையில் இந்த வழக்குகளை அவர் விசாரணைக்கு எடுத்ததில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஒரு தனி நீதிபதி ஒரு குறிப்பிட்ட வழக்கின் விசாரணையை தனது வரம்புக்குட்பட்டு தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறார் என்றால் அதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்டாயமா? எனவும் வினவினார்.
இதற்கு பதில் அளித்த உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பு வழக்கறிஞர், தனி நீதிபதி தானாக முன்வந்து விசாரிக்கும் நடவடிக்கைக்கு தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார் என சென்னை உயர்நீதிமன்ற சார்பில் ஆஜராகி உள்ள வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர்களான அமைச்சர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வைத்த வாதமாவது:
ஏன் இவ்வளவு அவசரமாக தனி நீதிபதி செயல்பட வேண்டும்? ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துவிட்டு உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு அதன் பின்னர் தான் இதுதொடர்பாக அனுமதி கோரி வந்த கடிதத்தை தலைமை நீதிபதி பார்த்தார் என்று சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி அனுமதி கடிதத்தை பார்ப்பதற்கு முன்பாகவே தனி நீதிபதி விசாரணையை தொடங்கியுள்ளார் என்பது குறித்து மனுதாரர்கள் முன்வைக்கும் வாதத்தையும் பார்க்க வேண்டி இருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:
இந்த குறிப்பிட்ட விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே அனுப்பிவைக்கப்படுகிறது. அவர் பார்த்து இந்த விவகாரத்தில் இந்த வழக்குகளை அவரே விசாரிக்கலாம் அல்லது வேறு எந்த நீதிபதிக்கு வேண்டுமானாலும் விசாரணைக்கு பரிந்துரைக்கட்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், இதே போன்று தலைமை நீதிபதி அனுமதி பெறாமல் தாமான முன் வந்து விசாரிக்கப்படும் மற்ற வழக்குகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.