சென்னை சென்ட்ரலுக்கு வந்ததும் FIRE GHOST-ஆக மாறிய கார்!
பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த வெள்ளை நிற மாருதி வேகன் ஆர் கார் ஒன்று, சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று மதியம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில், போக்குவரத்து சிக்னல் அருகே ஒரு வெள்ளை நிற வேகன் ஆர் கார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது.
அப்போது காரின் எஞ்சின் பகுதியிலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. இதை கவனித்த காரின் ஓட்டுநர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு காரை நிறுத்திவிட்டு, விரைந்து கீழே இறங்கி காரிலிருந்து விலகி நின்றார். அவர் கீழே இறங்கிய அடுத்த சில நொடிகளிலேயே, கார் சட்டென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது.
கண் இமைக்கும் நேரத்தில் கார் முழுவதுமாக தீயில் மூழ்கியதால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பதறினர். கரும்புகை விண்ணை முட்டியதுடன், தீயின் வெப்பமும் பரவியதால் அப்பகுதியில் ஒருவித பதற்றம் நிலவியது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நவீன உபகரணங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாக மாறியது.
இந்த தீ விபத்து காரணமாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.