“CAA அறிவிப்பு கவலையளிக்கிறது" அமெரிக்கா கருத்து!
CAA அறிவிப்பு குறித்து கவலைப்படுவதாகவும், அதன் அமலாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதாவது ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.
இதை ஏற்காமல் 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த போராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன்படி இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த குடியுரிமைச் சட்டம் கடந்த திங்கள்கிழமையன்று மார்.11 ஆம் தேதி அமல்படுத்தபட்டது.
கண்டனம்:
இதற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா கண்டனம் தெரிவித்து இந்த இரண்டு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட மாட்டது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், முதலமைச்சர் பினராயி விஜயனும் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஏஏவை மறுக்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும், சிஏஏவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
CAA குறித்து அமெரிக்கா கவலை:
CAA குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மார்ச் 11 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மதச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, அனைத்து சமூகத்தினருக்கும் சட்டத்தின்கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகம் என்று அவர் கூறியுள்ளார்.