விதவிதமாய்...வித்தியாசமாய் - விமர்சையாக நடைபெற்ற காளைகளுக்கான அழகன் போட்டி!
அரையிட்டான் ஏந்தலில், மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகன் போட்டி வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.
உலகமெங்கும் பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் அழகு, கல்வி, பொது அறிவு, தனிப்பட்ட திறன்பாடு போன்ற பல்வேறு திறமைகளை உள்ளடக்கி அழகிப்போட்டி, ஆணழகன் போட்டி என நடத்தப்படும். அதில் தேர்வாகும் நபர்களுக்கு மிஸ் வேர்ட், மிஸ் இந்தியா என சிறப்பு வாய்ந்த பட்டங்கள் வழங்கப்பட்டு, அவர்களை தனித்துவமாக ஊக்குப்படுத்துவது உண்டு. ஆனால் காலப்போக்கில் வீடுகளில் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படும் செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும் அழகு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படும் மஞ்சுவிரட்டு காளைகளை வளப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக, புதுவித முயற்சியாக காளைகளுக்கான அழகன் போட்டி நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மணமேல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அரையிட்டான் ஏந்தலில், மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகன் போட்டி வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து தாங்கள் வளர்க்கும் காளைகளை சிறப்பு அலங்காரத்துடன் அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்தனர். இதில் பங்கேற்ற அனைத்து காளைகளின் உடல் கட்டு, முகபாவனை, கொம்புகள் மற்றும் திமில் என அனைத்து அம்சங்களும் விழா குழு நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டது. மேலும் இப்போட்டியில் நான்கு பரிசுகள் மற்றும் ஒரு ஆறுதல் பரிசு என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதிகப்படியான காளைகள் வெற்றிப் பெற்றதால், விழா குழுவினர் குலுக்கல் முறையில் நான்கு காளைகளை தேர்வு செய்தனர்.

இப்பகுதியில் இது போன்ற போட்டிகள் முதன்முதலாக நடத்தப்பட்ட காரணத்தினால், இதனை காண்பதற்காக மஞ்சுவிரட்டு ரசிகர்களும், பெரியவர்கள், குழந்தைகள் பெண்கள் என பலரும் வருகை புரிந்து கண்டு ரசித்தனர்.