“தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழக்கவில்லை” - நெல்லை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்மாறன் என்ற நான்கு வயது சிறுவன் கழுத்து பகுதியில் கட்டி இருந்ததால், அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு திடீரென உயிரிழந்தான்.
மருத்துவர்கள் தவறான ஊசியை செலுத்தியதே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி 2வது நாளாக தொடர்ந்து இன்று அம்மருத்துவமனையின் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நெல்லை அரசு மருத்துவமனை டீன் ரேவதிபாலன் கூறுகையில்,
“பொன்மாறன் 10-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பொதுவான லிம்பேடனோபதி அல்லது ஹாட்ஜ்கின் லிம்ஃபோமா பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
லிம்ஃபோமா என்பது புற்றுநோய்களின் ஒருவகை ஆகும். இது நீரிழிவு குழாய்கள் மற்றும் நீரிழிவுக் கொழுந்து ஆகியவற்றை பாதிக்கும். இந்தப் புற்றுநோய் நீரிழிவு கொழுந்து, ஸ்ப்ளீன் , எலும்பு மஜ்ஜை மற்றும் பிற உறுப்புகளில் உருவாகலாம். நோயாளிகளுக்கு கழுத்து, கையிடுக்குப் பகுதிகளில் குழாய் போன்ற வீக்கம் காணப்படும்.
இதனால் 12ம் தேதி காலை, கான்ட்ராஸ்ட் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஐவி கான்ராக்ஸ்ட் மருந்து குழந்தைக்கு செலுத்தபட்டது. அதைத்தொடர்ந்து திடீரென வியர்வை, அதிர்வு போன்ற தீவிர நிலை குழந்தைக்கு ஏற்பட்டது. அதனால் உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அதில் ஷாக் நிலையில் குழந்தை சேர்க்கப்பட்டது. கேன்சர் நீண்ட நாள்களாக இருந்தது கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.
குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததால் திடீரென எதிர்பாராத அவசர நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தையை அதிக நுட்ப சிகிச்சைக்கு மாற்றப்பட்டு, வெண்டிலேட்டர் மற்றும் அட்ரினலின் ஆதரவு வழங்கப்பட்டது. மருத்துவர்கள் 1000 சதவீதம் முயன்றார்கள்.
மயக்கவியல் மருத்துவர், இதய நிபுணர், நரம்பியல் நிபுணர் ஆகியோரின் ஆலோசனை பெற்று தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும், சிறுவன் நிலை மேலும் மோசமடைந்து இருதயநிறுத்தம் ஏற்பட்டது. பல முயற்சிகளுக்குப் பிறகும் குழந்தை நேற்று இரவு 9.10 மணிக்கு உயிரிழந்துவிட்டது.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்தது என பரவும் தகவல் உண்மையில்லை” என தெரிவித்தார்.