For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திரையில் பூத்த புத்தகங்கள்... கைகளில் இருந்து காட்சிகளாக மாறிய கதைகள்..!

01:37 PM Jan 04, 2024 IST | Jeni
திரையில் பூத்த புத்தகங்கள்    கைகளில் இருந்து காட்சிகளாக மாறிய கதைகள்
Advertisement

சென்னை புத்தகத்திருவிழா தொடங்கியுள்ள நிலையில் புத்தகங்களாக வாசகர்களுக்கு பெரும் அனுபவத்தைத் தந்து திரைப்படங்களாக உருவெடுத்த கதைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

பயணங்கள் அனுபவத்தையும், வாசிப்பு அறிவையும் அள்ளி அள்ளித் தருபவை. நவீன தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் மனிதனின் வாழ்க்கையை ஆக்கிரமித்தாலும், வாசிப்பு என்பது இன்றும் வாசகர்களுக்கு இணையில்லா இன்பத்தை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் எங்கு புத்தகத்திருவிழா நடந்தாலும் மக்கள் பெருந்திரளாய் ஆதரவு அளிப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. தற்போது சென்னை நந்தனத்தில் 47-வது புத்தகத் திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. காகிதங்களில் மலர்ந்து திரைப்படங்களாக உருவான புத்தகங்களுக்கென்று தனி வரவேற்பு உண்டு.

ஒரு கதையை அல்லது நாவலை வாசகர்கள் படிக்கும்போது அவர்கள் கற்பனையில் விரியும் காட்சிகளுக்கு பிறரால் உருவம் கொடுத்திட முடியுமா என்பது கேள்விக்குறியே. வாசகனின் கற்பனைக்கு தீனி போட முடியாத திரைக்கதைகள் விமர்சனத்துக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது. ஆனால் முதன்முதலாய் திரையில் பார்ப்பவருக்கு அது புது அனுபவத்தைத் தரலாம். விரியும் காட்சிகளில் வித்தைகளைக் காட்டி வரவேற்பு பெறுவது ஒரு ரகம் என்றால், கதையில் அடிநாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தன்னுடைய திரைக்கதை மூலம் ரசிகர்களைக் கட்டிப்போடும் இயக்குநர்கள் மற்றொரு ரகம். அப்படி திரையை ஆக்கிரமித்த கதைகள் பேசுபொருளாகி இருக்கின்றன.

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்ற திரை ஜாம்பவான்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு கைவிடப்பட்ட திரைப்படம் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல். அதனை மணிரத்னம் சாத்தியப்படுத்தினார். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வெள்ளித்திரையில் வசூலை அள்ளிக்குவித்த வெற்றிப்படம் ‘பொன்னியின் செல்வன்’ என்பது மறுக்க முடியாத உண்மை.எழுத்தாளர் பூமணி எழுத்தில் வெளியான 'வெக்கை' நாவலை படமாக்கினார் இயக்குநர் வெற்றிமாறன். கருப்பொருள் மாறாமல் திரைக்கதையின் கோணத்தை மாற்றி பெரும் வெற்றி கண்டார். தனுஷ், கென் கருணாஸ் உள்ளிட்ட திரையில் தோன்றிய அனைவருமே கதைக்கு உயிரூட்ட, அதில் வெறியேற்றினார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். வெக்கையில் வாசகர்கள் உணர்ந்த வெம்மையை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி கண்டது 'அசுரன்'.

இயக்குநர் சசியின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று பூ. எளிய கதையை எளிமையாகவே தந்திருந்தார் சசி. ஆனால் அது ஏற்படுத்திய அதிர்வுகள் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய 'வெயிலோடு போய்' சிறுகதைக்கு சற்றும் சளைத்ததல்ல.

கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மு.சந்திரகுமார், ஆந்திர மாநிலத்தில் சந்தேகத்தின் பேரில் திருட்டு வழக்கில் சிக்கி தான் பட்ட இன்னல்களை நாவலாக எழுதினார். 'லாக்- அப் ஒரு சாமானியனின் குறிப்புகள்' எனும் பெயரில் வெளியான அந்த நாவலை விசாரணை எனும் பெயரில் திரைக்கு கொண்டுவந்தார் இயக்குநர் வெற்றிமாறன். அந்த எழுத்து திரைப்படமாக மாறியதாலேயே புகழின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டதாக நாவலாசிரியர் மு.சந்திரகுமார் குறிப்பிட்டார்.

பி.எச்.டேனியல் எழுத்தில் உருவான 'எரியும் பனிக்காடு' - பரதேசியாகவும் , ஜெயமோகன் எழுதிய  'ஏழாம் உலகம்' நான் கடவுளாகவும் திரையை ஆக்கிரமிக்க இயக்குநர் பாலாவின் திரைமொழி முக்கிய பங்கு வகித்தது. வாசகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தனித்தனியே வெவ்வேறு அனுபவங்களைத் தந்தவை இந்த கதைகள்.

நாஞ்சில் நாடன் எழுதிய  'தலைகீழ் விகிதங்களை' திரையில் - சொல்லமறந்த கதையாக மாற்றினார் தங்கர் பச்சான். சேரன் எனும் இயக்குநரை நல்ல நடிகராக அறிமுகம் செய்தது 'சொல்ல மறந்த கதை'.உமா சந்திரன் எழுதிய 'முள்ளும் மலரும்' நாவலை தனது மாஸ்டர் பீஸாக உருவாக்கினார் இயக்குநர் மகேந்திரன். ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா உள்ளிட்டோரின் நடிப்பில் உயிர்பெற்ற இந்த திரைப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. முள்ளும் மலரும் திரைப்படத்தை தொடர்ந்து புதுமைப்பித்தன் எழுதிய 'சிற்றன்னை' சிறுகதையை உதிரிப்பூக்களாய் திரைப்படமாக்கினார் மகேந்திரன். இந்த திரைப்படமும் தமிழ் திரையுலகின் கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆகிய நாவல்கள், அதே பெயரில் திரைப்படங்களாக வெளியாகின. இரண்டு திரைப்படங்களையும் பீம்சிங் இயக்கி இருந்தார்.

புஷ்பா தங்கதுரை எழுதிய ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள், மணியன் எழுதிய இதயவீணை ஆகியவையும் நாவல்களாக வரவேற்பைப் பெற்று பின்னர் திரைப்படங்களாக உருவானவை. மணியன் எழுதிய இலவுகாத்த கிளி நாவல், சொல்லத்தான் நினைக்கிறேன் என்கிற பெயரில் திரையில் வெளியானது.

சுஜாதாவின் கைவண்ணத்தில் உருவான ஜன்னல் மலர் 1979 ஆம் ஆண்டு யாருக்கு யார் காவல் என்கிற பெயரில் மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளியானது. ஜன்னல் மலர் கதையின் கருவில் இருந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

1986 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம், ரஜினி நடித்த ப்ரியா, எந்திரன், அர்ஜூன் நடித்த முதல்வன், விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் என பல்வேறு திரைப்படங்கள் எழுத்தாளர் சுஜாதாவால் உருவாக்கப்பட்ட நாவல்களாய் வாசகர்களின் கைகளில் தவழ்ந்தவை.தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில நாவல்களும் தமிழ்த்திரைப்படங்களாக ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளன. சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி நாவல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படமாகவும், டெல் மீ யுவர்ஸ் ட்ரீம் நாவல் அந்நியன் திரைப்படமாகவும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு வெளியாகின.

இப்படி நாவல்களாக வாசகர்களையும், திரைப்படங்களாக ரசிகர்களையும் கொள்ளை கொண்ட கதைகள் ஏராளம். ஆனால் படிப்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் அவை வழங்கும் திருப்தியான அனுபவம் மட்டுமே காலம் கடந்து நிலைத்து நிற்பவை...

  • அன்சர் அலி
Tags :
Advertisement