சிறந்த மகளிர் இலக்கியமாக நியூஸ்7 தமிழின் தலைமை செய்தி ஆசிரியர் எழுதிய ‘தண்டனைக் களமாகும் பெண்ணுடல்’ நூல் தேர்வு!
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக சுகிதா சாரங்கராஜ் பணியாற்றி வருகிறார். இவர் இதன்மூலம் தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் முதல் பெண் தலைமை என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார். இவர் கேள்வி நேரம், பேசும் தலைமை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், பல நூல்களையும் எழுதியுள்ளார். இந்த நிலையில், இவர் எழுதிய 'தண்டனைக் களமாகும் பெண்ணுடல்' என்ற நூலுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தாருக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, அடையாறு ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச் சாலையில், உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான சிறந்த நூல்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன் முன்னிலையில் இந்நிகழ்சசி நடைபெற்றது. அப்போது, 'மகளிர் இலக்கியம்' எனும் வகைப்பாட்டில் 'தண்டனைக் களமாகும் பெண்ணுடல்' எனும் நூலை எழுதிய சுகிதா சாரங்கராஜுக்கும், பதிப்பித்த ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தாருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகையை வழங்கி சிறப்பித்தார்.
மேலும், நூலாசிரியருக்கு ரூ.50 ஆயிரமும், பதிப்பகத்தாருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. இவருடன், வேலுநாச்சியார் காவியம், இதயக்கணல் ஈன்ற குழந்தை, அடையாற்றுக்கரை, தாமரையும் அருக்காணியும், அர்ஜுனன் மகன் அரவான்களப்பலி உள்ளிட்ட நூல்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.