பார்சலில் வந்த ஆண் சடலம்... பிரித்து பார்த்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஆந்திராவில் பெண்ணுக்கு வந்த பார்சலில் ஆணின் சடலம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யெண்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் நாக துளசி. இவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார். நாக துளசி வீடு கட்டுவதற்கு ஷத்ரியா சேவா சமிதி என்ற அமைப்பிடம் பண உதவி கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்த அந்த அமைப்பு, அவருக்கு டைல்ஸை அனுப்பியுள்ளது. இதையடுத்து கட்டுமான பணிக்காக மீண்டும் அந்த அமைப்பிடம் நாக துளசி உதவி கேட்டுள்ளார்.
மின்சாதனங்கள் வழங்குவதாக சமிதி உறுதியளித்ததாக கூறப்படுகிறது. மின்விளக்குகள், மின்விசிறிகள், சுவிட்சுகள் போன்ற பொருட்கள் வழங்கப்படும் என நாக துளசிக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்துள்ளது. இதனையடுத்து நேற்று இரவு நாக துளசியில் வீட்டு வாசலில் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு, அதில் மின்சாதனங்கள் இருப்பதாகத் தெரிவித்துவிட்டு ஒருவர் சென்றுள்ளார்.
அவர் சென்றபின் பார்சலை திறந்து பார்த்த துளசிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெட்டியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் இருந்துள்ளது. மேலும் அந்த பார்சல் உள்ளே ரூ.1.30 கோடி தரவேண்டும், தரமறுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை கடிதமும் இருந்தது.
இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் பார்சலை டெலிவிரி செய்த நபரை தேடி வருகின்றனர். க்ஷத்ரிய சேவா சமிதியின் உறுப்பினர்களையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
பார்சலில் இருந்தது 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் எனவும், அந்த நபர் 4-5 நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.