உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை!
உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள
நரியம்பட்டியைச் சேர்ந்தவர் தனபாண்டியன். இவர் கட்டிட தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அவர் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.
இதில் படுகாயமடைந்த தனபாண்டியன் மூளைச்சாவு அடைந்தார். விபத்தில் மூளைச்சாவு அடைந்த அவரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தானமாக வழங்கினர். பின்னர் அவரது உடல் இன்று (ஜனவரி 11) சொந்த ஊரான நரியம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடலுறுப்புகள் தானமாக வழங்கிய தனபாண்டியன் உடலுக்கு உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் சண்முக வடிவேல், வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர், அவரது உறவினர்கள் அவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.