மறைந்த முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவியின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்...
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநருமான எம். பாத்திமா பீவியின் (96) உடல் இன்று மதியம் அடக்கம் செய்யப்பட உள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவைச் சேர்ந்த பாத்திமா பீவி தனது ஊரிலேயே வசித்து வந்தார். 96 வயதான அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார். 1997 முதல் 2001-ம் ஆண்டு வரை பாத்திமா பீவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்தார். திருமணமாகாத பாத்திமா பீவி உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி மற்றும் இஸ்லாமிய பெண் நீதிபதி ஆகிய பெருமைகளைப் பெற்றிருந்தார்.
இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை – காவல்துறை தீவிர விசாரணை!
திருவனந்தபுரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை படித்த அவர் சட்டப்படிப்பையும் முடித்தார். கேரளாவில் 1950-ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். அதன் பிறகு நீதித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பாத்திமா பீவி 1989-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றினார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று அவர் காலமானார். அவரது உடல் நேற்று மாலை சொந்த வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பத்தனம்திட்டா வீட்டில் இருந்து 12.30 மணிக்கு உடல் டவுண் ஹால் எடுத்து செல்லப்படும். அங்கு ஒரு மணி நேரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படும். அதன் பின் மதியம் 2 மணியளவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.