Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக அரசு அயோத்தி ராமர் கோயில் கட்டியதை சாதனையாக காட்ட நினைக்கிறது!” - டி.ஆர்.பாலு

09:37 PM Jan 14, 2024 IST | Web Editor
Advertisement

வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக அரசு அதை மறைக்க ராமர் கோயில் கட்டியதைத் தனது சாதனையாகக் காட்ட நினைக்கிறது என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். 

Advertisement

2014-ஆம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்ற கூச்சமும் அந்தக் கட்சிக்கு இல்லை. இதை மறைப்பதற்கும் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும் அயோத்தியில் இராமர் கோயில் கட்டியதைத் தனது சாதனையாகக் காட்டி, தங்களது தோல்வியை மொத்தமாக மறைக்க நினைக்கிறார்கள்.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியது. அதில் எந்த வாக்குறுதியை இந்தப் பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்?

உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம், ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம், நாடு முழுவதும் இருக்கும் நதிகளை இணைப்போம், 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்துக் குடும்பத்துக்கும் சொந்த வீடு கட்டித் தருவோம், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை முழுமையாக மீட்போம், மீட்கப்பட்ட கருப்புப்பணத்தை இந்திய மக்கள் அனைவருக்கும் 15 லட்சமாகத் தருவோம் - என்றெல்லாம் நீட்டி முழக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்நாட்டுக்குப் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார்களே… அதில் ஏதாவது செய்தார்களா என்றால், அதுவும் இல்லை!

நாட்டு மக்களுக்கு பா.ஜ.க. கொடுத்ததெல்லாம் பெட்ரோல் விலை உயர்வு! டீசல் விலை உயர்வு! சமையல் எரிவாயு விலை உயர்வு! இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

நடுத்தரச் சூழலில் வாழும் மக்களையும், அனைத்துத் தரப்பு மக்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி. மூலமாக மாநில நிதி வளங்களைச் சுரண்டி நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். மழை, புயல் காலங்களில் தர வேண்டிய நிவாரணங்களைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் அநீதி நடக்கிறது.

இப்படி அனைத்து வகையிலும் மக்களைப் பத்தாண்டு காலமாக வேட்டையாடி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், இன்னும் முழுமையாகக் கட்டிமுடிக்காத அயோத்தி ராமர் கோயிலைக் கட்டியிருக்கிறோம் என்று சொல்லி வாண வேடிக்கை காட்ட முயல்கிறது.

பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டைப் பின்பற்றி வரும் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்திக் கூறும் மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டில் ஆழமான பிடிப்பு கொண்ட இயக்கம். வெறுப்பரசியலைப் புறந்தள்ளி சகோதரத்துவம் ததும்பும் நல்லிணக்கத்தை நாடும் தி.மு.கழகம், ஒருபோதும் அரசியலை ஆன்மீகத்திலும் - பக்தியில் அரசியலையும் புகுத்தி அரசியல் குளிர் காய்ந்தது இல்லை. திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியில் பல்லாயிரக் கணக்கான ஆலயங்களில் திருப்பணிகள், ஆயிரம் கோயில்களுக்குக் குடமுழுக்குகள் செய்தும், லட்சோப லட்சம் மக்கள் திரளும் திருவிழாக்களில் இறையன்பர்களுக்குத் தக்க வசதிகளைச் செய்தும், 5381 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகளை மீட்டும் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் ஆன்மீகத் தரப்பு மக்களும் போற்றி வருகின்றனர். இவற்றையெல்லாம் தேர்தல் மேடைகளில் பேசி ஓட்டரசியல் ஆதாயத்தை நாங்கள் நாடியதில்லை.

இறை நம்பிக்கை ஒருவரது ஆன்மத் தேடல்; தனிப்பட்ட உரிமை. அரசியல் அணி திரட்டவும், வாக்கு வங்கிக்காகவும் பக்தியை மூலதனமாக வைத்து, மக்களின் நம்பிக்கையில் அரசியல் செய்வது இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிரானது; அரசியல்சாசன அறத்துக்கு மாறானது; நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்லது அல்ல!

இறை நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் விருப்பமும் உரிமையும் ஆகும். ஒருவரது பக்தியை அரசியலுக்கான முதலீடாக மாற்றுவது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல, ஆன்மீக அறங்களுக்கே எதிரானது ஆகும். கோயில் கட்டுவதையும், திறப்பதையும் தனது கட்சியின் சாதனையாகக் காட்டி மக்களை ஏமாற்ற மத்திய பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆன்மீகத் திருவிழாவை பா.ஜ.க.வின் அரசியல் திருவிழாவாக மாற்ற நினைப்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் புறந்தள்ளுவார்கள்.

பாரதீய ஜனதா கட்சி தனது 'மதராஷ்டிரா'வுக்கான கால்கோள் விழாவைப் போல ஒரு கோயில் விழாவைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு காலம் காலமாக வாழக்கூடிய இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் செயலை பா.ஜ.க. தொடர்வதும் நல்லதல்ல!

மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமாக அல்லாமல், மக்களை ஏமாற்றுவதன் மூலமாக வெல்ல முடியுமா என்று பார்க்கிறது பாரதீய ஜனதா கட்சி. இதற்கு இந்திய நாட்டு மக்களே தக்க பாடம் கொடுப்பார்கள் என்பது உறுதி.

இவ்வாறு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Tags :
AyodhyaayothiBJPDMKnews7 tamilNews7 Tamil UpdatesRam Janm bhoomiRam LallaRam Mandirram templeTRBaalu
Advertisement
Next Article