"பாஜக அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" - மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!
காங்கிரஸ் கட்சி கட்சத்தீவை பறி கொடுத்துவிட்டது என்று சொல்லக்கூடிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட
தாம்பரம் பகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.
அன்பரசன் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர். பாலு ஆகியோர் கலந்து
கொண்டு வாக்கு சேகரித்தனர்.
இதனை தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்த போது சேசியதாவது:
"வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில்
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணியை
ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை
கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தொடர் பரப்புரையை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து இன்று செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகை
தந்தார்கள். மீண்டும் வருகை தருவதாக செய்திகள் வருகின்றன. 10 ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் கட்சத்தீவு பிரச்னையை கையில் எடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி கட்சத்தீவை பறி கொடுத்துவிட்டது என்று சொல்லக்கூடிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்றைக்கு வெளிவந்த ஆங்கில பத்திரிக்கையில் பல உண்மைகளை எடுத்துரைக்கிறது பாஜக அரசின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல்
செய்யப்பட்டது. அந்த வழக்கில் கட்சத்தீவு இலங்கையில் ஒரு பகுதி என தெளிவாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி தான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இது தொடர்பாக ஏதும் பேச முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார்.
தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவுகளை உள்ளது. நிச்சயமாக 40 இடங்களிலும் வெற்றி பெறும். சிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியுமா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார். சிஏஏ சட்டத்தை ஆதரித்து அதிமுக வாக்களித்ததை ஒருபோதும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது கட்சத்தீவு என்பதுதான இந்தியாவின் நிலைப்பாடு. அது எங்களுடையது என்று இலங்கை சொல்லக்கூடிய நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதன் வழியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். "
இவ்வாறு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மமக துணை பொதுச்செயலாளர் யாக்கூப் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.