பாலாற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் - அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!
பாலாற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் என அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் என விவசாயிகளால் அழைக்கப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார்.