For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அபார வெற்றியை கை கொண்ட ஆஸ்திரேலிய அணி! தனி ஒருவராக ஆப்கானிஸ்தான் வெற்றியை தட்டிப்பறித்த மேக்ஸ்வெல்!

10:57 PM Nov 07, 2023 IST | Web Editor
அபார வெற்றியை கை கொண்ட ஆஸ்திரேலிய அணி  தனி ஒருவராக ஆப்கானிஸ்தான் வெற்றியை தட்டிப்பறித்த மேக்ஸ்வெல்
Advertisement

மேகஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. 201 ரன்கள் விளாசி ஒற்றை மனிதனாக நின்று ஆப்கானிஸ்தானின் வெற்றியை மேக்ஸ்வெல் தட்டிப்பறித்தார். 

Advertisement

உலகக் கோப்பை தொடரின் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 39-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஜத்ரான் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் 2 பவுண்டரிகளை விரட்டிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரஹ்மத் ஷா தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் உடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியில் இப்ராஹிம் ஜத்ரான் 62 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

சுமார் 17 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்த இந்த ஜோடியில் ஒரு பவுண்டரியை விரட்டிய ரஹ்மத் ஷா 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பேட்டிங் செய்ய வந்தார். 

ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தபோது, நிதானமாக விளையாடி வந்த அந்த ஹஷ்மதுல்லா ஷாஹிதி மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து அஸ்மதுல்லா ஒமர்ஜாய் பேட்டிங் செய்ய வந்தார். 42.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்திருந்தபோது, 18 பந்துகளில் 22 ரன் அடித்திருந்த அஸ்மதுல்லா ஒமர்ஜாய், ஆடம் ஜம்பாவின் பந்தில் கிளென் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்ததாக, மொஹம்மது நபி பேட்டிங் செய்ய வந்தார். இவர் வந்த வேகத்திலேயே ஜோஷ் ஹேஸில்வுட் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து ரஷித்கான் பேட்டிங் செய்ய வந்தார். இதனிடையே மறுமுனையில் நிலைத்து நின்று நிதானமாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜத்ரான் 131 பந்துகளில் 101 ரன் குவித்து சதம் அடித்தார்.  இவருக்கு ஜோடியாக விளையாடிய ரஷித்கான் அதிரடியாக வானவேடிக்கை நிகழ்த்தி ரன் குவித்தார். 

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்தது.

டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய நிலையில், ஆரம்பத்திலேயே ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் 2 பந்துகளை மட்டும் சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதனை அடுத்து தொடர்ச்சியாக சொற்ப ரன்கள் எடுத்த நிலையில் 5 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனை அடுத்து களம் இறங்கிய மேக்ஸ்வெல் பொறுப்பை உணர்ந்து ஆடியதோடு, அதிரடியாகவும் விளையாடினார். இவருக்கு அடுத்ததாக களம் இறங்கியவர்களும் ரன் ஏதும் எடுக்காமல் சில பந்துகளை மட்டுமே சந்தித்து சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியாக பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல்லுடன் கைகோர்த்து நிலைத்து நின்றார். மறுமுனையில் மேக்ஸ்வெல் தனது அதிரடியை கைவிடாமல் பந்துகளை நாலாப்பக்கமும் பறக்கச் செய்து வாணவேடிக்கை காண்பித்தார்.

இந்த நிலையில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இருந்த நிலையில் பார்டினர்ஷிப் சேர்ந்த மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் ஜோடி, 8 ஆவது விக்கெட்டுக்கு 170 பந்துகளில் 202 ரன்கள் பார்டினர்ஷிப் குவித்து புதிய சாதனை படைத்தது.

இறுதியாக ஆஸ்திரேலிய அணியில் மற்ற யாரும் அரை சதத்தை கூட தொடாத நிலையில் மேக்ஸ்வெல் மட்டும் ஒற்றை மணிதனாக நின்று 201 ரன்கள் குவித்து அபார வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.

மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. மேக்ஸ்வெல் இந்த சாதனை வெற்றியை தனது கால் காயத்தை பொருட்படுத்தாமல் சாதித்து காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement