வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது - ஏப். 14 வரை தமிழ்நாட்டின் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வானது இன்று (செவ்வாய்கிழமை), வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதேபோல தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (08-04-2025) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று (செவ்வாய் கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வந்த வளிமண்டல சுழற்சி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 14ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
- 08-04-2025 முதல் 10-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- 11-04-2025 மற்றும் 12-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- 13-04-2025 மற்றும் 14-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.