"சாலைப் பணியாளர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது" - டிடிவி தினகரன்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, சாலைப் பணியாளர்களில் உயிர்நீத்தோர் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக எடுத்துக் கொண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து மேல்முறையீடு செய்து தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனில்லாத நிலையில், வேறு வழியின்றி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து பத்து நாட்களுக்கும் மேலாகத் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், மறுபுறம் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு ஆகும்.
எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.