மீட்புப் பணிகளுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது! - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், தென்மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகள், மீட்புப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “வரலாற்றில் இல்லாத அளவு கனமழை பெய்துள்ளது. தூத்துக்குடி, நெல்லையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. 1070 என்ற எண்ணை மக்கள் உதவிக்காக தொடர்பு கொள்ளலாம். இதுவரை 3,863 புகார்கள் வந்துள்ளன” என்று தெரிவித்தார்.
பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா,
“நேற்றில் இருந்து மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக ஆட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதிகப்பட்சமாக காயல்பட்டினத்தில் 96 செ.மீ. மழை பெய்துள்ளது. மாநில அரசு சார்பில் அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளோம். மீட்பு பணிக்கு, ராணுவம், கடற்படை, விமானப் படையிடம் உதவி கேட்டுள்ளோம். விரைவில் மீட்பு பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 7,500 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1992-ம் ஆண்டு பெய்ததைவிட தற்போது அதிகளவு மழை பெய்துள்ளது” என்று கூறினார்.