“அதிமுகவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே” - இபிஎஸ் கண்டனம்!
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று(மே17) காலை முதல் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 52 ஆவணங்களை, 5.5 கிலோ வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் கடந்த அதிமுக ஆட்சியில் உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி மீது கண்ணன் என்பவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழங்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள நிலையில், இன்று காலை தொடங்கி அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இருவரது வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சேவூர் ராமச்சந்திரன் மற்றும் நீதிபதி ஆகியோரை குறிவைத்து திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் முதலமைச்சர் ஸ்டாலின்-க்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது , பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார். டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்? பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம்”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.