"கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்" - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “உள்ளம் தேடி, இல்லம் நாடி” பிரச்சார பயணம் மேற்கொண்டார். சின்னகடைவீதியில் மக்களைதேடி மக்கள் தலைவர் கேப்டன் என்ற ரதத்திற்கு படையலிட்டு துவங்கி வைத்து ரோடுஷோவாக நடந்து சென்று மக்களை சந்தித்தார். பட்டமங்கலத் தெருவில் நடந்து சென்றும் ரதத்தில் ஏறியும் உற்சாகமாக பிரேமலதா பொதுமக்களை சந்தித்து கையசைத்தார்.
தொடர்ந்து பெரியகடைவீதி அருகே மக்கள் மத்தியில் பேசுகையில், "மயிலாடுதுறை தொகுதி ஏற்கனவே தேமுதிக கோட்டையாக இருந்தது. வரும் தேர்தலில் மீண்டும் இத்தொகுதியில் தேமுதிக வெற்றி பெறும். அவ்வாறு வெற்றி பெற்றால் இங்குள்ள பாதாளசாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
புறவழிச்சாலை அமைக்கப்படும். புதிய பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியிலேயே பேருந்து வசதிகள் இல்லை. தெருவுக்கு 10 டாஸ்மாக் கடைகள் திறந்ததவை விட வேறு பெருமை எதுவும் இல்லை. தேமுதிக வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் அது நிச்சயம் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கு பெருமை மிகுந்ததாக இருக்கும். அவர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும். ஜன.9-ல் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். திமுக ஆட்சியில் நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மை.
ஆனால் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். நிறைகளும், குறைகளும் நிறைந்த ஒரு ஆட்சியாக இருக்கிறது. தனது கூட்டத்தின் இடையே, அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டுமென்றே செல்வதாக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளது குறித்து கேட்டதற்கு, இது ஆண்டாண்டு காலமாக நடக்க கூடிய ஒன்றுதான்.
நாங்களே அதை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆம்புலன்ஸ் வாகனம் வரும், மின் விளக்குகளை அணைத்துவிடுவார்கள். இது போன்ற நிறைய பிரச்சினைகள் வரும். தமிழகத்தில் கட்சிதாவல்கள் என்பது புதுசுகிடையாது. தேமுதிகவில் கேப்டன் வளர்த்த எம்.எல்.ஏ.க்கள் முதுகில் குத்திவிட்டு சென்றதுண்டு. துரோகத்திற்கு வரலாறு கிடையாது என்றார். இவர் உடன் தேமுதிக பொருளாளர் சுதீஷ், மாவட்ட செயலாளர் பாலு, நிர்வாகிகள் மணி, கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.