யானை, குதிரைகள் நடனம் என களைகட்டிய ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹாவில் மகான் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலம் உள்ளது. இங்கு 851ம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா மவ்லீது ஷரீப் உடன் மே 9ல் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா யானை, குதிரைகள் நடனமாட,
தாரை தப்பட்டை ஒலிக்க, வானவேடிக்கை, வர்ண ஜாலத்துடன் ஊர்வலமாக தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்வு பெரும் விமர்சியாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று (மே 22) அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்ல
இபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து, அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5:50 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது. தர்ஹாவை 3 முறை சந்தனக்கூடு வலம் வந்த பின்பு, சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண போர்வைகளால் போற்றப்பட்டு மல்லிகை பூ சரங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது.
திருவிழாவை காண தென்னிந்தியா, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள்
குவிந்தனர். வண்ண, வண்ண மின் விளக்கொளி அலங்காரத்தில் தர்ஹா ஜொலித்தது. சந்தனக்கூடு திருவிழாவிற்காக மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏர்வாடி தர்ஹாவிற்கு இயக்கப்பட்டன.
தர்ஹா வளாகத்தில் சிறப்பு மருத்துவக்குழுவினர் முகாமிட்டு சிசிச்சை அளித்தனர். தர்ஹா வளாகத்தில் 40க்கும் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்காணித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோலாகலமான கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவிற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் இன்று உள்ளூர் விடுமுறை விடுத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.