போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!
போதைபொருள் தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் போதை பொருள் தடுப்பு பிரிவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் போதை பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகள் சமூகத்திற்கு எதிரான குற்றமாக பார்க்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் குற்றவாளிகளை கைது செய்வதோடு அவர்களின் குற்றங்களை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 2486 வெளி மாநில போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற போது பிடிப்பட்ட நபர்களின் ஜாமின் மனு மீதான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த கருத்தை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.