“சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்!” - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. INDIA கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் INDIA கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று (பிப்.20) மீண்டும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரை மேயராக தேர்வு செய்வதற்காக எட்டு வாக்கு சீட்டுகளை தேர்தல் நடத்திய அதிகாரி வேண்டுமென்றே சிதைத்து இருக்கிறார். எனவே அவர் அறிவித்த சண்டிகர் தேர்தல் முடிவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வாக்குகள் மனுதாரரான ஆம் ஆத்மிக்கு ஆதரவானவை. எனவே அந்த நபர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர், அந்த வகையில் ஆம் ஆத்மி வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.