டெல்லியில் தொடங்கியது 9-வது நிதி ஆயோக் கூட்டம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.
நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.மத்திய அரசின் கொள்கைகளை இந்த அமைப்பு வடிவமைக்கிறது.
பிரதமர் தலைமையிலான இந்த குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம், டில்லியில் இன்று துவங்கியது. இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ., மற்றும் அக்கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வளர்ந்த பாரதம் மற்றும் அதில் மாநிலங்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி, இண்டியா கூட்டணி கட்சிகள், ஆளும் மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.