கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடக்கம்!
கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் இன்று 61 வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா கோலாகலமாக தொடங்கியது.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று (மே 17) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த கிளி, டெடி பியர், மயில், காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட கிங் காங் குரங்கு, டிராகன், பாண்டா கரடி ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர கோடை சீசனில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படும்.
மலர் கண்காட்சியை காண தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. இன்று ( மே 17) காலை தொடங்கிய 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே - 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் தொடங்கி வைத்தனர்.
இதையும் படியுங்கள் : கொடைக்கானலில் கோலாகலமாக தொடங்கியது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா - புகைப்படம் தொகுப்பு!
மலர் கண்காட்சியை முன்னிட்டு நடவு செய்யப்பட்ட சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், டேலியா, உட்பட 15 வகையான 2.50 லட்சம் மலர்ச் செடிகள் பல வண்ணங்ளில் பூத்துக் குலுங்கின. கண்காட்சியின் சிறப்பு அம்சமாக மயில், கிளி, கரடி, ஈமு கோழி, மரம், ஆகியவை கார்னேஷன், ரோஜா மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட கிங் காங் குரங்கு, டிராகன், பாண்டா கரடி, வரையாடு, வீணை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
மலர் கண்காட்சியைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ. 75, 10 வயதுக்குக் கீழ் உள்ள சிறியவர்களுக்கு ரூ. 35 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பார்வையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம். கடந்த ஆண்டைவிட நுழைவுக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.