தருமபுர ஆதீன 26வது மடாதிபதியின் 4ம் ஆண்டு குருபூஜை வழிபாடு!
பழமை வாய்ந்த தருமபுர ஆதீன 26வது மடாதிபதியின் 4ம் ஆண்டு குருபூஜை விழாவில் ஆதீன மடாதிபதி பங்கேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வைத்தார்.
மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற சைவ மடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவி வகித்து வந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ம் ஆண்டு சித்தியடைந்தார். அவர் சித்தியடைந்த 4ம் ஆண்டு திதி இன்று நிறைவு பெற்றதை முன்னிட்டு அவரது சமாதி திருக்கோயில் அமைந்துள்ள சிங்கார தோட்டத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளை செய்து வைத்தார். லிங்க திருமேனிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த ஓதுவா மூர்த்திகளுக்கு பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் தருமபுர ஆதீன
மடாதிபதிகளின் அருளாசியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
நிகழ்ச்சியில் வழிபாடு செய்தனர்.