முடிவுக்கு வந்தது ஹாலிவுட் நடிகர்களின் 4 மாத போராட்டம்..!
அமெரிக்காவில் 4 மாதங்களாக நடைபெற்று வந்த ஹாலிவுட் நடிகர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
ஊதிய பற்றாக்குறை, செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எதிர்த்து, 'ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா' என்ற ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்களின் அமைப்பு கடந்த மே மாதம் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்திற்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்து, களத்தில் இறங்கி போராடினர்.
இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால், ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் நடிகர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹாலிவுட் நடிகர்கள் தொடர்ந்து போராடினர்.
இதையும் படியுங்கள் : ‘சலார்’ படத்தின் ட்ரெய்லர் எப்போது..? - புதிய அப்டேட்!!
இந்நிலையில், மீண்டும் நடிகர்களுடன் தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதில் உடன்பாடு ஏற்படவே, 118 நாட்களுக்கு பின்னர் நடிகர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், புதிய 3 ஆண்டு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, அது SAG-AFTRA அமைப்பின் ஒப்புதலுக்காக நாளை அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஹாலிவுட் நடிகர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு, ஸ்ட்ரீமிங் பங்கேற்பு போனஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.