33 மணி நேர போராட்டம் வீண்… ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண் உயிரிழப்பு!
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள கண்டேராய் என்ற கிராமத்தில் நேற்று காலை 6.30 மணியளவில், 18 வயது இளம்பெண் ஒருவர் சுமார் 540 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் இளம்பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு படையினரின் ஆய்வில் அந்த பெண் சுமார் 490 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. அந்த ஆழ்துளை கிணற்றின் அகலம் வெறும் ஒரு அடி மட்டுமே என்பதால் அந்த பெண்ணை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. சுமார் 33 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, இன்று மாலை 4 மணியளவில் மீட்பு படையினர் இளம்பெண்ணை மீட்டனர். உடனடியாக இளம்பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.