2வது சர்வதேச புத்தகக் கண்காட்சி - சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியது.!
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று தொடங்கியது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த புத்தகக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புத்தக எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் பங்கெடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது..
” நந்தனத்தில் தொடங்கிய நிகழ்வு நந்தம்பாக்கத்திற்கு வந்துள்ளது தொடர்ந்து இந்த புத்தக கண்காட்சி உலக நாடுகளுக்கு செல்லும். இந்த புத்தகக் கண்காட்சியில் கடந்த ஆண்டு 100 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 40 நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த சர்வதேச புத்தக கண்காட்சிக்கு வந்துள்ளனர்.
எதிர்வரும் ஆண்டுகளில் இந்த சர்வதேச புத்தக கண்காட்சி எல்லா நாடுகளுக்கும் சென்றடையும். ஏற்கனவே தமிழில் வெளிவந்த புத்தகமான கொரோனா குறித்த புத்தகம் செயற்கை நுண்ணறிவு வாயிலாக மொழி மாற்றம் செய்யப்பட்டு corona chronicles எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜெர்மன் மொழி இப்புத்தகம் பெயர்க்கப்படவுள்ளது.
உலக எழுத்தாளர்களுக்கெல்லாம் மூலமானவரான திருவள்ளுவர் தினத்தில் இந்த புத்தக கண்காட்சி தொடங்கி இருக்கிறது மகிழ்ச்சி”
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது..
” இலக்கியங்களை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் தமிழ் இலக்கியங்களை வெளியுலகுக்கு கொண்டு சேர்க்கவும், வெளி உலக இலக்கியங்களை தமிழுக்கு மாற்றவும் தான். பிற நாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் என்ற திருக்குறள் சொல்கிறது. அதன் அடிப்படையில் 52 தமிழ் புத்தகங்கள் 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.” என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.