இன்று நடைபெறுகிறது தவெக-வின் 2ம் ஆண்டு தொடக்க விழா!
நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில், அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் குறித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி வேலைகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி கடந்த பிப்.2ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) நடைபெறுகிறது. விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் தவெக நிர்வாகிகள் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்குப் பிரத்யேக பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ விருந்தும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தவெக ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கட்சியின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேற்று சென்னை வந்தடைந்தார்.
தொடர்ந்து சென்னை அடுத்த நீலாங்கரையில் உள்ள இல்லத்தில், தவெக தலைவர் விஜயை, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்தார். சந்திப்பின்போது இன்று (பிப்.26) நடக்கவிருக்கும் தவெக ஆண்டு விழாவில் என்ன மாதிரியான கருத்துகளை முன்வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின்போது என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் உடனிருந்தனர். இதனையடுத்து, இந்த விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.