தவெக-வின் கையெழுத்து இயக்கம் - முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் விஜய்!
நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில், அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் குறித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி வேலைகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி கடந்த பிப்.2ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவினையொட்டி விழா மேடைக்கு வந்த விஜய்க்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து, ‘புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்ட திணிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராடி #GetOut செய்திட உறுதியேற்போம்!’ என தவெக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கட்சியின் தலைவர் விஜய் முதல் கையெழுத்திட்டார். இவ்விழாவில் ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் மற்றும் தவெக நிர்வாகிகள் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.