தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா - தலைவர்களின் சிலைகளை இன்று திறந்து வைக்கிறார் விஜய் !
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கிய அன்றே தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தவெகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு அக்.27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
அந்த மாநாட்டில், அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் குறித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, கட்சியில் நிர்வாகிகள் நியமனம் தீவிரப்படுத்தப்பட்டது. அந்தவகையில், கட்சியை அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், விசிக மற்றும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல்குமார் ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடையும் நிலையில், 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக கொள்கை தலைவர்களான வேலுநாச்சியார், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள் ஆகியோரது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திறந்து வைத்து கட்சிக் கொடியை ஏற்றுகிறார். அதன்பிறகு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.