அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!
அண்ணல் அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் பிறந்தார். 1919 இல் பொதுவாழ்க்கையைத் தொடங்கிய அவர் படிப்பது, எழுதுவது, போராடுவது என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள் : இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்!
கிராமங்களில் அண்ணல் அம்பேத்கரின் தத்துவங்களையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துக்கூறி இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகள் வைத்தும் திருவிழா போன்று கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில், ஏப்.14ம் தேதியான இன்று அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தவெக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அம்பேத்கரை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.