"2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வரலாறு படைக்கும்" - விஜய் பேச்சு
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
"இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்று சிறப்புரையாற்றியதற்கு நன்றி. 1967, 77 சட்டமன்றத் தேர்தலை போல 2026 சட்டமன்றத் தேர்தலில் நடைபெற வேண்டும் என தமிழ்நாடு விரும்புகிறது. சமத்துவம், சகோதரத்துவத்துடன் 2026 தேர்தலை எதிர்கொள்ள உள்ளேன். ஒருவர் கட்சி ஆரம்பித்தால் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். நாங்கள் எதிர்ப்புகளை இடது கையில் கையாண்டு இருக்கிறோம்.
மாவட்ட நிர்வாகிகள் இளைஞர்களாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது, ஏன் இருந்தா என்ன? அண்ணா, எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போதும் அவருக்கு பின்னால் இருந்தவர்கள் இளைஞர்கள் தான். அந்த இளைஞர்களால் தான் 1967, 77 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி தமிழ்நாட்டிற்கு கிடைத்தது.
மக்களின் நலனை கண்டுகொள்ளாமல் பணம் பணம் என்று சுற்றித் திரிகிறார்கள். இவ்வாறு இருப்பவர்களை அரசியலை விட்டு வெளியேற்றுவது தான் நம்முடைய கட்சியின் வேலை. விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் தவெக சலைத்தது இல்லை என தெரியவரும்.
மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தாவிட்டால் நிதி கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறார்கள். கொடுக்க வேண்டியது மத்திய அரசின் வேலை. கேட்க வேண்டியது மாநில அரசின் கடமை. நாட்டில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது இருவரும் அடித்துக்கொள்வது போல ஹேஷ் டேக் போட்டு விளையாடி கொண்டிருக்கின்றனர்.
நம்முடைய ஊர் சுயமரியாதை கொண்ட ஊர், யாருக்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டாம். தனிப்பட்ட முறையில் எந்த மொழி வேண்டாலும் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். மாநில மொழியை கேள்விக்குறியாக்கி மற்ற மொழியை வலுக்கட்டாயமாக கொண்டு வந்தால் எப்படி? பொய் பிரச்சாரங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, மும்மொழி கொள்கை உறுதியாக ஏற்க வேண்டும்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.