5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' - முதல் கட்ட ஆய்வு தொடக்கம்!
வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்த 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' தொடர்பான முதற்கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் கட்டித்தருவது உள்ளிட்ட உதவிகளை வழங்க இந்த திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறுமையான நிலையில் உள்ள 5 லட்சம் ஏழை குடும்பத்தினருக்கு, அனைத்து அரசு உதவிகளையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : மகனுடன் கிரிக்கெட் விளையாடும் நடிகர் அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
அதன்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடர்பாக 5 கிராமங்கள் மற்றும் 2 நகர்புற பகுதிகளிலும் முதல் கட்ட ஆய்வு தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு மற்றும் மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் வழியாக தமிழ்நாடு முழுவதும் மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பங்கள் கண்டறியப்பட உள்ளன. இந்த ஆய்வுகளை இரண்டு மாதங்களில் முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.