“மனமார்ந்த நன்றி...” - மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நெகிழ்ச்சி
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி பெறும் முனைப்பில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய அளவில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் உள்ள இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதையும் படியுங்கள் : ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’, தொகுதி மறுவரையறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் தனித்தீர்மானங்கள்!
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், “பாரத தேசத்திற்கான, பாரத மக்களுக்கான சேவை செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கிய, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.