"தமிழ்நாடு மக்களுக்கு நன்றி" - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி வழங்கிய தமிழ்நாடு மக்களுக்கு நன்றி என விசிக தலைவர் திருமாவளவன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான INDIA கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. இந்நிலையில், திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி வழங்கிய தமிழ்நாடு மக்களுக்கு நன்றி என நியூஸ் 7 தமிழுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : INDIA கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை! டெல்லி சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி வழங்கிய தமிழ்நாடு மக்களுக்கு நன்றி. 25 ஆண்டுகால தொடர் போராட்டத்தின் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற நிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி எட்டியுள்ளது. இந்த அங்கீகாரத்தை வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி.
தென்னிந்தியாவில் மாநில அங்கீகாரம் பெற்ற கட்சி என்று விசிக வலுப்பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தை அனுகி பானை சின்னத்தையே நிரந்தர சின்னமாக அங்கீகாரம் செய்ய கோர உள்ளோம்.மக்களிடம் பானை சின்னம் சென்றடைந்துள்ளது. பாஜக முனெடுத்த பாலராமர் என்ற அரசியல் எடுபடவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முரண்பாடுகள் காரணமாக சில கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.