"சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி" - நடிகை #Kasthuri பேட்டி
சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் தலைமறைவானார். அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
நடிகை கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 17ம் தேதி ஹைதராபாத்தில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, தனக்கு ஜாமின் வழங்கக்கோரி நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், தனது குழந்தைகளை பராமரிக்க ஆள் இல்லை எனவும் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததை அடுத்து கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து நடிகை கஸ்தூரி சிறையில் இன்று (நவ.21) இருந்து வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி பேசியதாவது,
"என்னை குடும்பம் போல் பாதுகாத்த எனது நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது வழக்கறிஞர்களுக்கும், அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்கு ஆதரவு கொடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்றேன். என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும் ஆந்திர, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன்"
இவ்வாறு நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.