"எளிமையான நடிப்பிற்கு பின் உள்ள உழைப்பை அங்கீகரித்ததற்கு நன்றி" - #NationalAward குறித்து மனம் திறந்த நித்யா மேனன்!
எளிமையான தெரியும் நடிப்பிற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல அதனை அங்கீகரித்ததற்கு நன்றி என தேசிய விருது வென்ற நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 16அன்று வெளியிடப்பட்டது. அதன்படி 2022ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடனத்திற்கான விருது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு கிடைத்துள்ளது. இப்பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நடிகை விருது பெற்ற நித்யா மேனனுக்கு தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் தேசிய விருது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நித்யா மேனன் தெரிவித்துள்ளதாவது..
“ திருச்சிற்றம்பலம் படத்திற்காக எனது முதல் தேசிய விருது பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. பார்ப்பதற்கு எளிமையான தெரியும் நடிப்பிதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல என புரிந்துக்கொண்ட தேசிய விருது தேர்வுக்குழுவிற்கு எனது நன்றி.
சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ அதிகரிப்போ, செயற்கையான உடலை மாற்றிக்கொள்வதிலோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சித்து வருகிறேன். இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ், என எங்கள் 4 பேருக்கான விருது.
ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிகைக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் ஒரு இடத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினம்." என நித்யா மேனன் பதிவிட்டுள்ளார்.