குமரின் அனந்தன் மறைவிற்கு அவரது மகளும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் (வயது 93). வயது மூப்பு காரணமாக குமரி அனந்தன் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். கடந்த 4 தினங்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பு மற்றும் சிறுநீர் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (ஏப்.8) இரவு குமரி அனந்தன் சிசிக்கை பலனின்றி உயிரிழந்தார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையான இவர் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் குமரி அனந்தனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குமரின் அனந்தன் மறைவிற்கு அவரது மகளும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் என் அம்மாவோடு இரண்டர கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக, தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்து, இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது. வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர். இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு, வாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார்.
என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில் பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை மனதில் கொண்டு,உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம்.
உங்கள் வழி, உங்கள் வழியில் நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல நாமும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும், என்று உங்கள் ஆசை ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம். போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன். நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.."
இவ்வாறு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.