தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் சித்தா மருத்துவம் படித்தோர் சிகிச்சை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் சித்தா மருத்துவம் படித்தோர் சிகிச்சை அளிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் வல்லம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்
மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்தில் பயின்று முறையாக சான்றிதழ் பெற்றுள்ளேன். ஆனால் காவல்துறையினர் சித்த மருத்துவ கிளினிக்கை நடத்த விடாமல் தொந்தரவு செய்து வருகின்றனர். ஆகவே சித்த மருத்துவ கிளினிக்
நடத்துவதில் தலையிடக் கூடாது என மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என
கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்குத்ச் வந்த போது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் எப்படி மருத்துவ படிப்பு சான்று வழங்கியது. இதுவரை எத்தனை மாணவர்கள் இந்த சான்றிதழ் பட்டய படிப்பை முடித்து இருக்கிறார்கள்? என கேள்விகளை எழுப்பிய நீதிபதி இதுகுறித்து பதிவாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று (24.10.2024) நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், "2007-08 கல்வி ஆண்டில் 744 மாணவர்கள் பயின்ற நிலையில், 576 பேர் மட்டுமே மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழை பெற்றுச் சென்றுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதி சான்றிதழில் இது மருத்துவ பயிற்சிக்கானது அல்ல என குறிப்பிட்டு, உறுதிமொழி பெற்றிருந்தாலும், மாணவர்கள் அதனை பின்பற்றுகிறார்களா? என்பது தெரியாது. அவர்களில் யாரேனும் சித்த மருத்துவர்களாக பயிற்சி செய்தால், அது சமூகத்திற்கு அழிவைத் தரும். ஆகவே தமிழக சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் உடன் இணைந்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு சித்த மருத்துவப் பட்டய படிப்பை முடித்தவர்கள்,தமிழகத்தில் எங்கேனும் சித்த மருத்துவராக பயிற்சி செய்கிறார்களா என்பது குறித்து உரிய ஆய்வு செய்து அவர்கள் ஏதேனும் மருத்துவ பயிற்சி செய்யவில்லை என உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
அதோடு, இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.