தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு 1,000 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்!
மாட்டுப் பொங்கலையொட்டி தஞ்சை பெருவுடையார் கோயிலில் மகாநந்தியம் பெருமானுக்கு ஆயிரம் கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்புகள், மலர்களால் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. தற்போது இக்கோயிலில் நந்தியம் பெருமான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் மகர சங்கராந்தியை முன்னிட்டு நந்திக்கு திரவியபொடி, மஞ்சள், தயிர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாரதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட புடலங்காய், பீட்ருட், கத்தரி, பாகற்காய், முட்டைகோஸ், கேரட், செளசெளவ், வெண்டைக்காய், பரங்கிக்காய் , உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் ஜாங்கிரி, மைசூர்பாகு, முறுக்கு உள்ளிட்ட இனிப்பு வகைகளை கொண்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்திக்கு பூஜைகள் செய்யப்பட்டு சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேலும் 108 பசுமாடுகள் அலங்கரிக்கப்பட்டு மஞ்சள், சந்தனம், குங்குமிட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை, துண்டு போன்ற வஸ்திரங்களை சாத்தி கோ-பூஜை வழிபாட்டை பொதுமக்கள் நடத்தினர். இந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.